ஆக்கம்: ந. சந்திரசேகர் 050 8743990
பெண்:
கோவைக்கனி யிதழை நாவலாய் மாற்றியது ஏன்?
கோவைக்கடி கின்றாள் கோதைப் பெண்ணொருவள்;
கோடைஇடியாய் முழங்கினளே கொண்டவனிடத்தே,
அடங்காக் கோபத்தில் ஆர்ப்பரித்து நின்றனள்காண்!
ஆண்:
ஆவல் அதிகரிக்க அந்தக்கோவைப்பழ இதழ்கள்,
நாவல் பழமானதுவோ?காரணம் ஆணல்ல, மானே-கூவுவதுடன்
சேவல்பணி நின்றுவிடும், பெட்டை யன்றோ
தாவிவந்து கூடுவதும், விட்டுவிலகி ஓடுவதும்?
பெண்:
மேட்டில்நீர் இருந்தால் பள்ளம்தனில் பாயும்,
சூட்டில் உடல்காய்ந்தால் வாடையைத் தானாய்நாடும்;
வீட்டில் விளக்காய் ஜொலித்தவளை தழல் போலாக்கி
விட்டு ஜாலம்பேசுகிறீர், ஜந்து போலாக்கிவிட்டீர்!
ஆண்:
கோடைக் காலத்துப் பால்நிலவு நீ-ஆனால்
ஆடையுடன் இருக்கும்வரை அரை நிலவு,
ஓடைக்கரை யோரம் நீரிலாடிவிட்டு வருத்துதே
வாடையென, ஈரஉடை களைந்தால் முழுநிலவு!
பெண்:
நெருப்பாய் இருந்தவள்நான், நீர் விட்டு
கருப்பாய் மாற்றி விட்டீர்- ஒருக்கால்
பொறுப்பாய் இருந்தி ருந்தால் நான்
திருமகள் போல் வாழ்ந்தி ருப்பேன்!
ஆண்:
திருமால் உடன் இருக்கையில் தான்,
திருமகள் மகத்துவம் ஊர் அறியும்,
வெறும்பால் மோர் ஆகாது-பெண்ணே;
உறை ஊற்றினால்தான் நெய் தெரியும்!
பெண்:
என்னவோ சொல்கின்றீர், இதயத்தில் பாலாய் வார்க்கின்றீர்,
கன்னல்போல் இனிக்கிறீர்தான் -ஆனாலும் கன்னியென
முன்னர்வாழ்ந்த வாழ்க்கை இதைவிட சுகமோவென,
பெண்நான் நினைப்பதுவும் தவறோ? சொல்லிடுவீர்!
ஆண்:
கோடைவரும் போதுமனம் வாடையை நாடும்,
வாடைவந்து விட்டாலதை ஜாடையாய் சாடும்;
கிடைத்தது பிடிக்காது- இல்லாததைத் தேடும்-
இதைத்தான், அக்கரைப்பச்சை என்கிறதோ ஏடும்?
Saturday, 18 July 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment